ஹரிஜனங்கள். குடி அரசு - தலையங்கம் - 27.11.1932 

Rate this item
(0 votes)

 இந்திய தேசீயம் என்னும் சுயராஜ்ய முயற்சி தோல்வியடைந்தவுடன் இந்து மதப்பிரசாரம் தொடங்கப்பட்டு அதற்கான முயற்சிகள் செய்யப்பட்டு வருவது யாரும் அறியாததல்ல. 

உண்மையைச் சொல்லுமிடத்து இந்திய தேசியமென்பதே இந்து மத ஆதிக்கமே தவிர வேறல்ல. இக்கருத்தை இதற்கு முன் பல தடவைகளில் விளக்கியிருக்கின்றோம். இந்திய தேசியம் இந்து மத ஆதிக்கத்திற்கு பாடுபடுகின்றது என்று நன்றாய் விளங்கியதால் தான் இந்து மதத்தின் காரணமாய் உயர் நிலையில் இருப்பவர்களான 100க்கு 90 வீதமுள்ள பார்ப்பனர்கள் காப்பிக் கடை வக்கீல், குமாஸ்தா உள்பட யாவரும் தேசியப் பிரசாரத்தை நடத்துகிறார்கள். அதோடு மாத்திரமல்லாமல் மத உணர்ச்சியால் தான், மதத்தின் கற்பனையின் பயனாகத் தான் தாங்கள் செல்வவான்களாக இருக்க முடிகின்றது என்று கருதிய செல்வவான்கள் எல்லோரும் இந்த தேசிய முயற்சிக்கு கோடிக்கணக்கான ரூபாய்களை உதவி வருகின்றார்கள். அதற்கு பிரதி உபகாரமாகவே தான் இந்திய தேசியத்தில் முக்கிய கொள்கையாக, "மதத்தையும், மத ஆதாரங்களையும் காப்பாற்றப்படும்" என்றும், எல்லா மதங்களினுடைய எல்லா ஆதாரங்களையும் எல்லா மதசம்பந்தமான பழக்க வழக்கங்களையும் காப்பாற்றப்படும் என்றும் உறுதி கூறுவதாக திட்டம் போட்டுக் கொண்டார்கள். இதன் பயன் எல்லா மதங்களுக்கும் சமமானது தான் என்பதாகக் காணப்பட்டாலும், பலர் அந்தப்படியே நம்பியிருந்தாலும், மேற்கண்ட கொள்கைகள் அமுலில் இருக்கும் வரை இந்து மத சமூகம் என்பது தான் எப்போதும் மெஜாரிட்டியாகவும், மற்ற மத சமூகங்கள் என்பது எப்போதும் மைனாரிட்டியாகவுமே இருந்து வருவதற்கு ஏதுவாய் இருக்கும். எப்படி ஆன போதிலும் இம்மத பாதுகாப்புகள் என்பவை மேல் ஜாதிக் காரனையும் பணக்காரர்களையும் காப்பாற்றவும் நிலை நிறுத்தவும் பலமான ஆயுதமாக இருந்து வரப் போகின்றனவே தவிர, பல மதங்களிலும் உள்ள தாழ்த்தப் பட்ட மக்களையும், ஏழை மக்களையும் கூலித் தொழிலாளி என்ற மக்களையும் ஈடேற்றச் செய்யப் போவதில்லை என்பதோடு வேறு வழியில் ஈடேற முயர்ச்சித்தாலும் அதைத் தடைப்படுத்தவே பயன் படப்போகிறது என்பது மாத்திரம் உறுதி. 

அன்றியும் இன்றைய தேசிய மதப்பிரசாரகர்களும் இந்த விஷயங்கள் தெரிந்து தான் தங்களின் இன்றைய உயர் நிலைக்கும், செல்வ நிலைக்கும் ஆபத்து வந்து விடக் கூடாது என்று கருதியே அவசர அவசரமாக மதப் பாதுகாப்பையும் மத ஆதார பாதுகாப்பையும் வெகு நாளைய பழக்க வழக்க பாதுகாப்பையும் அரசியல் திட்டத்தில் புகுத்தி பந்தோபஸ்த்து செய்து கொண்டார்கள். 

தாழ்ந்த ஜாதி என்பது ஒழியவேண்டுமானால் உயர்ந்த ஜாதி என்பது ஒழிய வேண்டாமா? ஏழ்மைத் தன்மை ஒழிய வேண்டுமானால் பணக்காரத் தன்மை ஒழிய வேண்டாமா? என்பது நடு நிலையில் இருந்து நியாயக் கன்களுடன் பார்த்தால் மூடனுக்கும் விளங்காமல் போகாது. ஆகவே மதம் வேண்டும், சாஸ்திரம் வேண்டும். வர்ணாசிரம தர்மம் வேண்டும், இவ்வளவும் போராமல் வெகு நாளைய பழக்க வழக்கங்களும் வேண்டும். இவ்வளவு மாத்திரம் அல்லாமல் இந்தியாவிலுள்ள சுதேச சமஸ்தான அரசர்களும் அவர்களது ஆட்சிகளும் இருக்க வேண்டும் என்றும் தீர்மானித்துக் கொண்டால் பிறகு சுயராஜ்ஜியம் என்பது என்ன அது யாருடைய நன்மைக்கு பயன்படக் கூடியது என்பது யோசிக்க தக்க விஷயமல்லவா? என்று கேள்க்கின்றோம். 

தோழர் காந்தியுள்பட "சுதேச சமஸ்தான அரசர்கள் இந்தியாவில் இருக்க வேண்டியது சரி"என்று ஒப்புக் கொண்ட பிறகு வட்ட மேஜை மகா நாட்டிலும் ஏற்றுக் கொண்ட பிறகு சுயராஜ்யம் என்பதன் பொருள் என்ன என்பது சிறிது யோசித்தாலும் விளங்காமல் போகாது ஆகவே வரப்போகும் சுயராஜ்ஜியத்தில் மதம், சாஸ்திரம். ஜாதி, அரசன், முதலாளி, தொழிலாளி, ஹரிஜனங்கள் ஆகியவைகள் இருக்கும் என்பதும் அந்நிலைகள் காப்பாற்றப்படும் என்பதும் மறுக்க கூடியதல்ல. 

தோழர்களே! தேசிய சமதர்ம வாதிகளே இப்படிப்பட்ட சுயராஜிய முயற்சிக்கு தேசீய முயற்சிக்கு மக்களுக்குள் சகல துறைகளிலும், ஒற்றுமை யும் சமத்துவமும் வேண்டும் என்பவர்கள் ஒத்துழைக்க வேண்டியதா? அல்லது தடையாய் இருந்து அம்முயற்சிகளை முறியடிக்க வேண்டியதா? என்பதை யோசித்துப் பாருங்கள் சென்ற வாரம் நாம் குறிப்பிட்டபடி ஒற்றுமை மகாநாட்டில் என்ன செய்ய முடிந்தது? "இந்து மதத்திற்கு விரோதமாய் இருக்கக் கூடாது. அதைக் குற்றம் சொல்லக் கூடாது' அதன் மோசத்தையும் சூழ்ச்சிகளையும் வெளியிடக் கூடாது" என்கின்ற ஒப்பந்தத்தை மகமதியர்களிடம் பெற்றுக் கொண்டு அதற்கு பதிலாக அவர்களுக்கு ஏதோ சில பிச்சைகள் போல் கொடுத்து ஏமாற்றப்பட்டு விட்டது. அங்கு கூடியிருந்த முஸ்லீம்கள் உண்மையிலேயே சமதர்ம வாதிகளாய் இருந்திருப்பார்களானால் அவர்கள் எந்த விதத்தில் இந்த ஒப்பந்தத்திற்கு கட்டுப்பட்டிருக்க முடிந்தது என்பதே நமது கேள்வி? இந்து மதத்தில் உள்ள ஊழல்களும், மோசங்களும், கொடுமைகளும், சூழ்ச்சிகளும் அவர்களுக்குத் தெரியாதா? அம்மதத்தால் 100க்கு 90 மக்கள் பலர் கீழ் ஜாதியாயும், பலர் ஏழைகளாயும், பலர் கூலிகளாயும், பலர் பிச்சைக்காரர் களாகவும் இழிவு படுத்தப்பட்டு கஷ்டப்படுவதும் தெரியாதா? 

மகமதிய மதம் தன் சமூகத்தை மாத்திரம் தான் காப்பாற்ற வேண்டியது. அதற்காகவே மற்ற மத மக்கள் எவ்வளவு இழிவும், கொடுமையும் படுத்தப் பட்டாலும் அதற்கு சம்மதித்து பயன் பெற்றுக் கொள்ள வேண்டியதும் என்றுதான் போதிக்கின்றதா? என்று கேள்க்கின்றோம். ஆகவே இந்து முஸ்லீம் ஒற்றுமையானது இந்திய சமூக ஏழை மக்களுக்கு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பெருத்த ஆபத்தாகவும் எவ்வகையாலும் வேறு வித சிபார்சோ ஆதரவோ வருவதற்கு இடமில்லாமலும் செய்து விட்டது என்பது தான் நமது முடிவு.

அது போலவே பூனா ஒப்பந்தமும் தாழ்த்தப்பட்ட மக்கள் விஷயத்தில் அவர்கள் வெகுகாலமாக கஷ்டப்பட்டு வாதாடி சிறிது கூட இந்து சமூக உயர் நிலை மக்கள் என்பவர்களின் உதவியே இல்லாமல் - அவர்களது எதிர்ப் பையும் சமாளித்து ஏதோ சிறிது தலை தூக்கிப் பார்க்க அடைந்த நிலையை பெரிய பாராங்கல்லைத் தூக்கி அதன் தலையில் போட்டு கசகச வென்று நசுங்கும் படி செய்தது போல் நாசமாக்கப்பட்டு விட்டது. போதாக்குறைக்கு மறுபடியும் என்றென்றைக்கும் தலை தூக்க அவர்களுக்கு ஞாபகமே உண்டாகாதபடி அவர்களுக்கிடையில் கடவுள் பிரசாரமும் மதப்பிரசாரமும் செய்ய புகுந்தாய் விட்டது. 

இது குதிரை கீழே தூக்கிப் போட்டது மல்லாமல் புதைக்க குழியும் தோண்டிற்றாம்” என்ற பழமொழிப் படியே ஆகிவிட்டது. எப்படியெனில் தாழ்த்தப்பட்டவர்கள் அல்லது தீண்டப்படாதவர்கள் என்கின்ற சமூகத்தார் தங்களை உயர்ந்த ஜாதியார் என்பவர்களிடம் இருந்து பிரித்து தங்களுக்குத் தனித்த தொகுதி வேண்டும் என்று கேழ்ப்பதற்கு ஏற்பட்ட காரணம் தான் என்ன ? 

இந்து சமூகத்துள் தாங்கள் கலந்திருந்தால் தாங்கள் விடுதலை அடைந்து மனிதனாக வாழமுடியாதென்றும், அதற்கு காரணம் இந்து சமூக மதக் கொள்கைகள் என்றும் உணர்ந்தே தென்னாடு முதல் வடநாடு பஞ்சாப் வரையில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் தாங்கள் இந்து மதஸ்தர்கள் அல்ல என்று சொல்லிக்கூடத் தங்களுக்கு தனித்தொகுதி கேட்டார்கள். அப்படிப் பட்டவர்களை இந்துக்கள் தான் என்று சொல்லச் செய்து அவர்கள் தனித் தொகுதியையும் கெடுத்து அவர்களுக்கு ஹரிஜனங்கள் என்று பெயரும் கொடுத்து, அவர்களுக்குள் மதப்பிரசாரம் செய்வது என்பது எப்படிப்பட்ட கொடுமையான காரியமாகும்? என்பதை வாசகர்களே உணர்ந்து கொள்ளவும். 

 

அவர்களுக்கு ஹரிஜனங்கள் என்று பெயர் சூட்டியதானது அவர்களை எந்த வழியிலாவது தீண்டப்படாதார் அல்லாதவர்கள் என்று குறிப்பிட இடமிருக்கின்றதா என்று பாருங்கள். பறையர் என்றாலும் ஆதி திராவிடர் என்றாலும் ஹரிஜனங்கள் என்றாலும் இவைகளில் எது உயர்ந்த பெயராகும். இந்த மூன்று பெயர்களையும் நினைக்கும் போதே தீண்டாதவர்களுக்கு இடப்பட்ட பெயர் என்றுதான் புலப்படுகின்றதே தவிர இவற்றுள் அவர்கள் தீண்டப்படாதவர்கள் அல்ல என்பதற்கு என்ன அடையாளம் இருக்கிறது. 

ஒரு சமயம் இந்துக்கள் அல்லாதவர்கள், மகமதியர்கள், புத்தர்கள் என்று பெயர் வைத்திருந்தாலாவது மற்றக் காரியங்களில் எப்படி இருந்தாலும் தீண்டாதவர்கள் என்கின்ற எண்ணம் தோன்றாதவாறு மறைவு படலாம். அப்படிக்கில்லாததால் இதை "பட்டுக்குஞ்சம் கட்டிய துடப்பக் கட்டை" என்பது போல் ஹரிஜனங்கள் என்ற பெயர் இருக்கின்றது என்று தான் சொல்ல வேண்டும். அன்றியும் ஆதிதிராவிடர் என்ற பெயராவது தீண்டாதவர்கள் என்பதை மறைக்காவிட்டாலும் இந்த நாட்டின் பழங்குடிமக்கள் என்ற கருத்தையாவது கொண்டிருக்கின்றது என்பதாக எண்ண இடமுண்டு ஆனால் இந்த "ஹரிஜனங்கள்" என்பது அவர்களுக்கு தீண்டாதார் என்ற பட்டத்தை மறைக்காமல் போவதோடு (ஏனெனில் அந்தப் பெயரானது தீண்டப்படாதாருக்கு தோழர் காந்தியால் வைக்கப்பட்ட பெயர் என்பது தெரியாமல் போகாது) ஹரி என்கின்ற ஒரு கடவுளை பூஜிப்பவர்கள் என்றும் அதற்கு பக்தி செய்ய வேண்டியவர்கள் என்றும் ஏற்பட வேண்டியதாய் இருக்கின்றது. தோழர் காந்தி ஒரு வைணவர் ஆனதாலும் தோழர் ராஜ கோடாலாச்சாரியார் ஒரு வைணவர் ஆனதாலும் தங்கள் மதத்தைப் பெருக்க வைணவக் கடவுள் பெயரைக் கொடுக்க வேண்டியதாய் விட்டது. 

சைவ ரத்தம் ஓடும் சைவர்களான சைவ” தேசியவாதிகள் இதை எப்படிப் பொருத்துக் கொண்டிருக்கின்றார்களோ நமக்கு தெரியவில்லை. 

நிற்க, 

தீண்டாமை விலக்கு பிரசாரம் என்பதாக பெயரை வைத்து வட நாட்டு பணக்காரர்களிடமும் மதக்காரர்களிடமும் வக்ஷக்கணக்கான பணத்தை வசூல் செய்து தென்னாட்டில் திருச்சியில் தீண்டாமை மகாநாடு கூட்டி ஒவ்வொரு ஊர்களிலும் கமிட்டிகள் ஏற்படுத்தி அவைகளுக்கு பணத்தை வினியோகித்து பெரிய பிரசாரங்கள் செய்யப் போவதாய்த் தீர்மானித்திருக் கிறார்கள். இதன் பிரசார வேலைத் திட்டம் என்ன என்பதை தோழர்களே “தேசிய சமதர்மவாதிகளே” சற்று சிந்தித்துப்பாருங்கள். “ஜாதி இந்துக்களிடை யேயும் ஹரிஜனங்கள் இடையே "ஹரி கதைகள் பஜனைகள் செய்வது" மேஜிக் வண்டர்ன் படக் காக்ஷிகளுடன் பிரசாரங்கள் செய்வது துண்டு பிரசுரம் வழங்குவது” என்பதாகும் இது 23-11- 32 தேதி இந்தியா பத்திரிகையில் 10வது பக்கம் 2வது கலத்தில் குறிப்பிடப் பட்டிருக்கிறது. அன்றியும் இது அகில இந்திய தீண்டாமை விலக்கு சங்கத் தமிழ் நாட்டு ஸ்தாபன காரியதரிசியால் அனுப்பப் பட்ட உத்தியோக தோரணையான அறிக்கையாகும்.. 

ஆகவே தேசீயத்தின் போக்கு என்ன? தீண்டாமை விலக்கின் இரகசியம் என்ன? ஹரிஜனங்கள் என்ற பட்டத்தின் சூக்ஷி என்ன என்பதை இப்போதாவது சிந்தித்துப்பாருங்கள். 

குடி அரசு - தலையங்கம் - 27.11.1932

Read 25 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.